குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - மகரம்
மனிதாபிமான எண்ணம் கொண்டு பிறருக்கு உதவி செய்யும் மகர ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு மூன்று, பனிரெண்டாமிடத்து அதிபதி ஏழாமிடத்தில் அமர்வது வரும் 26-05-2026 முதல் குரு பார்வை ராசிக்கு அமைவது சிறப்பான பலனாக அமையும். பனிரெண்டு ராசிகளில் குரு மட்டும் மறைந்தாலும், பார்த்தாலும் பலன் தரும் ராசி மகரம் மட்டுமே என்பதால் உங்களுக்கு ஓராண்டு சிறப்பான பலனாக அமையும். சாதுர்யமாக எதையும் செய்து நன்மை அடைவீர்கள்.
குரு உங்களின் ராசியை பார்வை இடுவது உங்களின் உடல்நலனில் மேம்பாடு அடையும். சிறந்த அறிவாற்றல் உண்டாகும். எதை எந்த நேரத்தில் எப்படி செயல்பட்டால் நற்பலன் கிடைக்கும் என்று உணர்ந்து செயல்பட்டால் சரியாக எல்லாம் நடக்கும். காலத்தை வீணடிக்காமல் செயலில் இறங்கி பாடுபடுவீர்கள். தொழிலாளர் நலன்களிலும், அரசியலில் பொது மக்களின் நலனிலும் மிகவும் ஆர்வமுடனும் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். கையாள வேண்டிய செயல்களை கவனமுடன் செயல்பட்டு முடித்து விடுவீர்கள். சிலருக்கு கண்ணில் இருந்த பிரச்சனை தீர வாய்ப்பு அமையும்.
உங்களின் விடாமுயற்சிக்கு நற்பலன் கிட்டும். ராசிநாதன் மூன்றில் அமர்ந்து குரு பார்வை பெறுவது உங்களுக்கு ஊக்கமும், மன தெளிவும் உண்டாகும். எடுத்த காரியத்தை முழு முயற்சியுடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடுமையான உங்களின் உழைப்பு வீண்போகாமல் காப்பாற்றபடுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் உங்களுக்கு நீங்கள் பார்க்கும். தொழிலே நிரந்தரமான வருவாயை பெற்று தரும். குற்ற செயல்களை செய்பவரை கண்டால் கண்டிப்பீர்கள். திருந்தி வாழ வழிகாட்டுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு பெருகும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்க பெறுவீர்கள். சகோதர ஸ்தானம் பலம் பெற்று விளங்கும். பிரிந்த சகோதரரிடம் அன்பு காட்டுவீர்கள்.
20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு அதிசாரமாக சிம்மத்திற்கு இரண்டு மாதம் செல்வது சிலருக்கு நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகும். புதைந்து கிடந்த பல விடயங்களை வெளி கொண்டு வருவீர்கள். ரகசிய திட்டங்களை கண்காணித்து வெளிபடுத்துவீர்கள். சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். திறமையுடன் செயல்பட வேண்டி வரும். கவலைகளை நீக்கி சுபிட்சம் பெறுவீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தனஸ்தான பார்வை பொருளாதாரத்தை மேம்படுத்தும். மீண்டும் குரு வக்கிரம் பெறுகிறார். வக்கிர குரு லாபஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலும், உத்தியோகத்திலும் மிகப்பெரிய வளர்ச்சியையும், மனமகிழ்ச்சியையும் தருவார். கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவவிடமாட்டீர்கள். தான் மட்டுமில்லாமல் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். புதிய திட்டங்களை செம்மைப்படுத்தி விரைவில் அமுல்படுத்துவீர்கள். வீடு மனை வாங்கும் திட்டம் செயல்பட துவங்கும். இறைவழிபாடு மூலம் உங்களின் எண்ணம் நிறைவேறும். பல விடயங்களில் விட்டு கொடுத்து செயல்படுவீர்கள். எது கிடைத்தாலும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தொடர்ந்து நவகிரக குருவுக்கு கொண்டைகடலை மாலை 108 கட்டி போட்டு மூன்று நெய் தீபமிட்டு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து வரும் பக்தர்களுக்கு கொடுத்து வர அனைத்து காரியமும் சிறப்பாக இயங்கும் பொருளாதார நிலை முன்னேற்றம் உண்டாகும்.
















