குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - ரிஷபம்
தன்னை மதிப்பவரை தானும் மதித்து மரியாதை கொடுக்கும் ரிஷப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு அட்டமாதிபதியும், லாபாதிபதியுமான குரு பகவான் உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் அமர்ந்து ஏழாமிடம், ஒன்பதாமிடம், லாபஸ்தானத்தை பார்வை இடுகிறார் குரு பகவான். 26-05-2026 முதல் தனஸ்தானத்தில் இருந்து முயற்சி ஸ்தானத்திற்கு குரு வருவது பார்வை இடம் மிக சிறப்பான நற்பலன்களை பெற்று தரும்.
ஏழாமிடத்தை குரு பார்வை இடுவது திருமணம்.. இதுவரை ஆகாதவருக்கு திருமணம் நடக்கும். கவலைகள் முழுமையாக தீரும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வெளிநாட்டு பயணம் செய்ய வாய்ப்புகள் அமையும். திறம்பட செயல்படுவீர்கள். புதிய நண்பர்கள் சேர்க்கை இன்னும் சிறப்பாக அமையும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். தொழில் ரீதியான பயணம் அடிக்கடி சென்று வரவேண்டி இருக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல களத்திரஸ்தானம் வலுபெறும். நினைத்த காரியம் கைகூடும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கருத்து வேறுபாடுகளுடன் இருந்தவர்கள் மீண்டும் இணைவார்கள்.
வரும் 20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு பகவான் அதிசாரமாக சுகஸ்தானத்திற்கு செல்வது மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது பல காலம் தேங்கி கிடந்த வழக்குகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும். திருப்பவே முடியாது என்று நினைத்த தங்க நகையை திருப்புவீர்கள். வரவேண்டிய இடத்தில் நிலுவை தொகை வந்து சேரும் முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் மக்களின் நல்ல மதிப்பை பெறுவீர்கள். விட்ட தொழிலை மீண்டும் துவங்கும் வாய்ப்பு அமையும்.
பாக்கியஸ்தானத்தை குரு பார்வை இடுவது உங்களின் செய்யும் தொழில், உத்தியோகம் ஆகியவற்றிற்கு நல்ல மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் தருவார். தங்க நகை வாங்குவது, அடகு தங்கத்தை மீட்க வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது அடுத்தடுத்து நடக்கும். குற்றமில்லாத சூழ்நிலை உருவாகும். லாபஸ்தானத்தை குரு பார்ப்பதும் உங்களின் யோகாதிபதி சனியை குரு பார்வை பெறுவதும் நல்ல சூழ்நிலையாக அமையும். சேமிப்புகள் மீது ஆர்வம் உண்டாகும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் செய்யும் எந்த காரியமும் சிறப்பாக அமையும்.
பெயர்ச்சியின் போது இருந்த நிலையை காட்டிலும் வக்கிர காலத்தில் பல நன்மைகளை குரு தருவார் அடுத்த பெயர்ச்சி வரும் வரை உங்களின் எண்ணம் போல வாழ்வு அமையும் கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். எதிரியாக இருந்தவர் ஒதுங்கி கொள்வார் சரியான நேரத்தில் காரியத்தை செய்து நல்ல பலனை அடைவீர்கள். ஆசிரியர் பணியில் இருப்பவருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் கிடைக்க சந்தர்ப்பம் அமையும். புத்திர, புத்திரிகளின் கல்லூரி கனவுகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வீடு பராமரிப்பு பணிகளை செய்வீர்கள். உங்களின் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்வீர்கள். தேவைகளுக்கு ஏற்ப பண புழக்கம் இருக்கும். அசைவும் சொத்துகளை பாதுகாத்து கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்தி தொடர்ந்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி கொள்வீர்கள். ஆன்மீகம் தழைக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு கொண்டைகடலை மாலை (108) அணிவித்து மஞ்சள் தூள் தூவி அதன் மேல் நெய் தீபமிட்டு எலுமிச்சை (தேசிகாய்) சாதம் செய்து நைவேத்தியம் கொடுத்து வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும்.
















