குரு பெயர்ச்சி பலன்கள் - 2026 - விருச்சிகம்
எதிர்கால திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு குரு பகவான் தன ஸ்தானத்திற்கும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதும் உங்களின் ராசியை பார்வை இடுவதும் வரும் 26-05-2026 முதல் செயல்படுகிறார். கடந்த காலங்களில் அர்த்தாஷ்டம சனியால் பல்வேறு துன்பங்களை அடைந்த உங்களுக்கு இனி குரு பார்வையால் எல்லாம் ஜெயமே. உங்களின் யோகாதிபதி சந்திரன் வீட்டில் குரு உச்சம் பெற்று ராசியை பார்ப்பது இந்த ஓராண்டு சிறப்பான நற்பலன்களை அடைவீர்கள்.
ஐந்தாம் பார்வையாக குரு ராசியை பார்வை இடுவது உங்களின் உடல் நலனில் முன்னேற்றம் உணடாகும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்து சரி செய்து கொள்வீர்கள். உடற்பயிற்சி, மனதெளிவுக்கு உண்டான பயிற்சியை செய்து நல்ல பலன் அடைவீர்கள். மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தை குரு பார்வை செய்வது எடுத்த முயற்சிகள் தடையின்றி நடக்கும். தொடர் முயற்சியால் நினைத்ததை சாதித்து கொள்வீர்கள். செய்யும் தொழிலில் நீங்கள் எப்படி, எதிர்பார்த்தீர்களோ அதனை போல சிறப்பாக நடக்கும். சந்திரன் குரு பார்வை பெறும்போது திடீர் பணவரவு வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். புனித தீர்த்த யாத்திரை சென்று வருவது தெய்வ வழிபாடுகள் செய்வது, குரு மார்கள் ஆசீர்வாதம் செய்வது போன்ற நற்செயல்கள் நடக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை இடுவது சனியும் அங்கிருந்து பலன் தருவதால் பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். குல தெய்வ வழிபாடு மூலம் பல காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதையும் சகமாக பார்க்கும் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். காரியத்தில் கண்ணாக இருந்து செயல்படுவீர்கள்.
20-10-2026 முதல் 22-12-2026 வரை குரு அதிசாரமாக சிம்மத்திற்கு வருவது தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்த தனஸ்தானத்தை பார்வை இடுவதும் சுகஸ்தானத்தை பார்வை இடுவதும் சிறப்பான நல்ல பலன்களை பெறுவீர்கள். வாகனங்களை புதுப்பித்தல், வீட்டை அலங்காரம் செய்து கொள்ளுதல். அடிக்கடி வெளியூர் சென்று வருதல் நிகழும். ஆறாமிடத்து பார்வையால் வங்கி மூலம் கடன் பெற்று செய்யும் தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகம் பார்ப்பவருக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மீண்டும் வக்கிரமாகி கடகத்திற்கு வருகிறது. வக்கிர குருவால் உங்களின் தொடர் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். அவர்களின் எதிர்கால சிந்தனைகளை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகைகளை பெற்று தருவதில் முழுகவனம் செலுத்துவீர்கள். விளையாட்டு வீரர்கள் வெற்றி வாகை சூடி வருவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் கூடுதல் முன்னேற்றம் உண்டாகும். வரவுக்கு தகுந்தபடி செலவு செய்வீர்கள். குருவோடு கேது இணையும்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றி அவல் சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்து மனமுருக வேண்டிக் கொள்ள உங்களின் எண்ணம் போல் வாழ்வு அமையும். நைவேத்தியத்தை தானம் செய்து விட்டு வரவும். கண் சார்ந்த சத்திர சிகிச்சைக்கு பொருளாதார உதவி செய்ய மிக சிறப்பு.
















