நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்
சாத்தியமான விடயங்களை திறம்பட செயல்படுத்தும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் நீசம் பெற்று அமர்வது எந்த காரியத்திலும் முழுமையான ஈடுபாடுகளின்றி இருப்பீர்கள். விரைவான காரியத்தில் மந்த நிலையில் செயல்பட்டாலும் காரிய அனுகூலம் பெற்று மேன்மை அடைவீர்கள். சொந்த உறவுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவீர்கள். எளிதில் ஏமாற்றம் அடைவீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து குரு பார்வை பெறுவதால் புதிய வாகனம் வாங்குதல் பழைய வாகனத்தை பழுது பார்த்தல் போன்ற காரியம் நடக்கும். இதுவரை உடல் உபாதை என்ன என்பதை அறியாமல் அவஸ்தைபட்டு வந்தீர்கள். அது என்ன என்பதை கண்டு கொண்டு சரி செய்து கொள்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து செயலில் மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.
காரண காரியமின்றி எல்லா வித வேலையையும் இழுந்து போட்டு செய்வீர்கள். எதையும் பொறுமையுடன் செய்வது நல்லது. எப்பொழுதும் மனதில் பதற்றம் இருக்கும். இது நடக்குமோ நடக்காதோ என்று சந்தேகத்துடன் செயல்படுவீர்கள். அட்டம ஸ்தானத்தில் சந்திரன் அமர்வது பொருளாதார தடையையும் காரியத்தில் கவன குறைவும் உண்டாகும். யோகாதிபதி வீட்டில் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் தேவைகளுக்கு பொருளாதார உதவி கிடைக்கும்.
அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபாடுகள் இருக்கும். இதனால் தன் குடும்பத்தை சரியாக பார்க்க முடியாமல் போகும். தொழிலாளர்களின் நீண்ட நாட்கள் பிரச்சனை பேசி தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். அதற்காக எடுக்கும் முயற்சிகளிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பாடுபடுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குருவுடன் கேது அமர்ந்து தொழில் போட்டிகளை சமாளித்து தொழிலை தக்க வைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவருக்கு மேலதிகாரிகள் நெருக்கடி உண்டாகும்.
எதிலும் அமைதியே உங்களுக்கு சரியான தீர்க்கமாக அமையும். விரையஸ்தானத்தில் சூரியனும், லாபாதிபதி புதனும் இணைவு பெறுவதால் தொழிலில் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் தன்னிறைவு பெறுவீர்கள். கலைதுறையினருக்கு எதிர்பார்த்த பலன்கள் இருக்காது சரியான பாதையை கடக்க முடியாமல் தாமதமாக செயல்பட்டு நிறைய வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள். இறைவழிபாடுகள் உங்களுக்கு நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெளிர் சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-11-2026 வியாழன் காலை 10.50 முதல் 28-11-2026 சனி பகல் 01.03 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு நவகிரகத்தை வலம் வந்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர தடைபட்ட காரியம் கைகூடும். மனதில் வலிமையும், தைரியமும் உண்டாகும்.
















