ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - 2026 - ரிஷபம்
திடமான நம்பிக்கையும், உறுதியும் கொண்டு விளங்கும் ரிஷப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை தொழில் ஸ்தானத்தில் இருந்து ராகு இனி பாக்கிய ஸ்தானத்திலும், சுகஸ்தானத்தில் இருந்த கேது மூன்றாமிடத்தில் அமர்ந்து, ஒன்றரை ஆண்டுகள் பலன் தருவார்கள். முயற்சி ஸ்தானத்தில் கேது அவர்வது யோக பலன்களை பெற்று தரும். வரும் 13-11-2026 முதலான ராகு / கேது பெயர்ச்சி நற்பலனாக அமையும்.
மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்வை இடுவது எடுத்த காரியம் வெற்றி பெறும் வரை உங்களின் முயற்சியை கைவிட மாட்டீர்கள். முதலில் கேது குருவுடன் ஆறு மாதங்கள் இணைவு பெறுவது சிறப்பான பலன்களை பெற்று தரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் தரும். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள்.
பூச நட்சத்திரத்தில் கேது அமரும் போது சற்று கவனமுடன் எட்டு மாத காலங்கள் இருக்க வேண்டிவரும். காரணமில்லாத வம்பு வழக்கு வந்து சேரும். காரிய தடைகள் உண்டாகும். எதையும் சவாலாக சந்திக்க வேண்டிவரும் இருப்பினும் உங்களின் மனவலிமையாலும் ராசிநாதன் சுக்கிரனின் அருள் பார்வையாலும் சில விடயங்களை சரி செய்து கொள்வீர்கள். தீர்த்த யாத்திரை செல்லுதல் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுதல் போன்ற பலன்களை பெறுவீர்கள். யாருக்கும் கெடுதல் நினைக்காத உங்களுக்கு கேடு இல்லை நன்மையே உண்டாகும்.
இதுவரை தொழில் ஸ்தானத்தில் இருந்த ராகு இனி பாக்கியஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியையும் தொழில் முன்னேற்றமும் காண்பீர்கள். தந்தை வழி சொத்துகள் சார்ந்த பிரச்சனைகளில் நல்ல தீர்வு உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அவிட்டத்தில் ராகு அமரும் போது சகோதரர்களிடம் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். திருவோணத்தில் ராகு அமரும் போது வரவேண்டிய தொகைகள் வந்து சேரும். சேமிப்புக்கு வழிவகுக்கும். கிடைத்த தொகையில் இடம் மனை வாங்கி போடுவீர்கள். உத்திராடத்தில் ராகு அமர உத்தியோகத்தில் உள்ளவருக்கு சில தடைகள் மற்றும் சிரமங்கள் உண்டாகும்.
எதையும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கருத்து ஒற்றுமைகள் நிலவுவது கஷ்டமாக அமையும். சிலருக்கு புதிய சேர்க்கை நண்பர்களின் தொடர்புகள் வெறுப்பு உணர்வுகளை பெற்று தரும். பணியில் இருப்பவருக்கு கவன குறைவு உண்டாகும். கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்கு கெடுதலை காட்டிலும் நன்மையே நல்லபடியாக அமையும். பொருளாதார கஷ்டம் வராது.
பரிகாரம்:
நவகிரக ராகு / கேதுவுக்கு ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபமேற்றி செவ்வரளி பூ வைத்து புளியன்னம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும். தடையின்றி காரியம் சித்தியாகும்.
















